Pages

Monday, December 26, 2011

ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளை நீக்க எளிய வழிமுறைகள்


     
           
எமது அழகான விருப்பமான ஆடைகளில் எம்மை அறியாமலே கறை படிந்துவிட்டால் களங்கிப் போகின்றோம். அதற்கு எதிரான நடவடிக்ககைள எடுக்க முடியாமல் அவ் ஆடையை அணிய முடியாமல் போய்விட்டதே எனக் கவலைப்படுகின்றோம். இதற்காக எக்கவலையும் கொள்ளத் தேவையில்லை. நான் தருகின்ற இக்குறிப்புக்களைக் கவனியுங்கள். அதன்படி முயற்சி செய்யுங்கள். அநுபவியுங்கள். 
      
             முதலில் கறை படிந்துள்ள ஆடை எவ்விதமான நூலில் தயாரிக்கப்பட்டுள்ளது, என்ன விதமான கறை ஆடையில் படிந்திருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதுபற்றிய விளக்கம் உங்களிடம் இல்லையென்றால் மட்டுமே கறை அகற்றும் நிபுணர்களை நாட வேண்டும். இலகுவான வழிமுறைகள் எம்மிடம் இருக்கும் போது நாம் எதற்காக நிபுணர்களைத் தேடி அலைய வேண்டும். 

பொதுக்குறிப்புக்கள்:


                             

கறைநீக்கும் கலவையை வீட்டில் தயாரிக்கும் முறை:

15 கிராம் கறியுப்பை அரை லீற்றர் தூய்மையான Wine spirit (Weingeist) உடன் கரைக்கவும். இந்தக் கலவை அநேகமான கறைகளை நீக்கப் பயன்படுகின்றது.         


இதைவிட எச்சிலைக் கைகளில் எடுத்து கறை படிந்த இடத்தில் தேய்த்து அதன் பின் அவ்விடத்தைக் கழுவலாம். இதுவும் ஒருவகை உடனடி கறை அகற்றும் முறையாகப்படுகின்றது. 



          பால் கோப்பி, பால் தேநீர் கறை அகற்றும் வழிமுறைகள்,


           

          முதலில் குளிர் நீரினால் அவ்விடத்தைக் கழுவ வேண்டும். பின் சூடான கிளிசரீனை அதன்மேல் தேய்க்க வேண்டும். முடிவில் அக்கிளிசரீனை நீரினால் கழுவ வேண்டும். இப்போது பாருங்கள். பால்கோப்பிக் கறையோ பால்தேநீர் கறையோ உங்கள் கண்ணில் தென்படுகின்றதா? ......

                பால் கலக்காத கோப்பி, தேநீர் கறையை அகற்ற

கழுவக்கூடிய ஆடை:

              ஒரு பாத்திரத்தின் மேற்பகுதியில் கறை படிந்துள்ள பகுதியை இழுத்துப்பிடியுங்கள். அதன் மேல் கொதிக்க வைத்த நீரை ஊற்றுங்கள். அதன் பின் கிளிசரீனை அக்கறையின் மேல் நன்றாகத் தேய்த்துப்பூசுங்கள். பின் நீரினால் அப்பகுதியைக் கழுவுங்கள். 

கழுவிப் பாவிக்க முடியாத ஆடையும் கம்பளி ஆடையும்:

               முதலில் கிளிசரினை கறைபடிந்துள்ள பகுதியின்மேல் தேய்க்க வேண்டும். 1 அல்லது 2 மணித்தியாலங்கள் அப்படி ஊறவிடுங்கள். பின் சூடான தண்ணீரால் துடைத்து எடுங்கள். பின் மேலும் கீழுமாக இரண்டு துணிகளை வைத்து இடையிலே இக்கறை படிந்த துணியை வைத்து அழுத்தியினால் ( Iron) அழுத்திக் காயவையுங்கள். இப்போது பாருங்கள்......


பட்டு ஆடை:

                சூடான சவர்க்கார நீரினால் தேய்த்துக் கழுவி அகற்றலாம்.


          ஆடையில் ஒட்டியுள்ள Chewing gum           
             அகல்வதற்கான வழிமுறைகள் 

     

எவ்வித நூலினால் நெய்யப்பட்ட ஆடையாக இருந்தாலும் இவ்வழி முறையைக் கையாளலாம். முதலில் ஆடையை ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு குளிர்சாதனப்பெட்டி Freezer இனுள் வைத்துவிடுங்கள். இந்த Chewing gum இறுக்கமாக வந்ததன்பின் Chewing gum  ஐச் சுரண்டி எடுங்கள். அதன் பின் இறுதியில் (Weingeist) Wine Spirit  பயன்படுத்தி தேய்த்தபின் சாதாரணமாக கறை அகன்றுவிடும். 



 பெரிய கம்பளம் அல்லது பெரிய ஆடைகளாக இருந்தால் Chewing gum மேல் ஐஸ்கட்டியை வைத்து இறுகிய பின் சுரண்டி எடுக்கலாம். 

                     பசையை நீக்குவதற்கு

பசையைக் காயவிட்டு சுரண்டி எடுக்கலாம். பின் (Wein Spirit) Wine spirit அல்லது Spirit இனால் துடைத்துவிடலாம். 


                  Jam  (Marmelade) கறைகள் 

கழுவக்கூடிய துணி, கழுவமுடியாத துணி, கம்பளித்துணி:

சூடான கொதிக்க வைத்த நீரினால் கழுவவேண்டும். பின் அவ்விடத்தை நன்றாகத் தேய்த்தபின் (Weingeist) Wine Spirit இனால் துடைக்கலாம். 

கம்பளி ஆடை:


ஒரு பாத்திரத்தின் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்நீர் ஆவியின் மேல் கறைபடிந்த பகுதியைப் பிடித்தல் வேண்டும். பின் சாதாரணமாகக் கழுவும்போது அக்கறை அகன்றுவிடும்.


                                               இரும்புக்கறை


ஒரு இரவு முழுவதும் மோரினுள் இரும்புக் கறை படிந்த பகுதியை அமிழ்த்தி வைக்க வேண்டும். அடுத்தநாள் வெளியே எடுத்து நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். 

கம்பளி:


மருந்துக் கடைகளில் விற்கும் சவர்க்கார ஸ்பிரிற் இனால் கழுவிய பின் சாதாரண ஸ்பிரிற் விட்டுக் கழுவ வேண்டும். 

பட்டு ஆடை:

பட்டு ஆடையில் பிடிக்கும் இரும்புக்கறை நீங்கமாட்டாது.




மேலும் பலவகைக் கறைகளை அகற்றுகின்ற வழிமுறைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்



Thursday, December 1, 2011

                                                           
                                             மூளை

 
                
             உலகின் மாபெரும் ஆச்சரியமே - எமை
             உலகில் நடமாடச் செயும் தெய்வமே
             எமதுடலின் தலைமை யகமே
             நீ இல்லையெனில் எமக்கேது வாழ்வே  

           
மனித மூளையானது உலகின் ஆச்சரியமாகக் காணப்படுகின்றது. நாம் பார்க்கின்றோம், பேசுகின்றோம், சாதனை படைக்கின்றோம். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மூளையே. 50 கோடி ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று உலக சாதனைகளைப் படைக்கின்ற வல்லமை கொண்டதாக காணப்படுகின்றது. மூளையின் இயக்கத்தை முதன்முதலில் அறிந்து கொண்டவர் கிப்போகிரெட்ஸ் என்னும் மருத்தவராகும். முதன்முதலில் மூளை சிந்திக்கத் தொடங்கியது ஆபத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், பசியைப் போக்குவதற்காக உணவிடங்களைத் தேடுவதற்கும் மட்டுமே.  கால ஓட்டத்திலேயே புதியபுதிய விடயங்கள் அவதானிக்கப்பட்டு எண்ணங்கள் விரிவடைந்து புதிய புதிய பல கண:டுபிடிப்புக்களை மூளை கண்டுபிடித்தது. எமது இரண்டு கைகளையும் பொத்திப்பிடித்து ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது எமது மூளையின் அளவை நாம் கண்டுகொள்வோம். 

                                                  
          
                                        ஒரு வளர்ந்தவருக்கு மூளை 200 மில்லியாடன் ( ஒரு மில்லியாடன் - 100 கோடி) நரம்பு உயிர் அணுக்களைக் கொண்டுள்ளது. 100 பில்லியன்(டிரில்லியன்)  வலைப்பின்னல் புள்ளிகளைக் கொண்டிருக்கும். நரம்புப்பாதை கிட்டத்தட்ட 5.8 மில்லியன் கிலோமீற்றரில் அமைந்திருக்கும். இது 5800000000000 மீற்றர். இது 15 தடவை பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரமாகும். ஒரு தொகை வயர் பின்னலைக் காவிக்கொண்டு நாம் திரிவது எமக்கே தெரியாது இருக்கிறது அல்லவா! 
     
             மூளையின் பாரம் 1,3 தொடக்கம் 1,6 கிலோகிராம் ஆகும். இது உடற்பாரத்தின் இரண்டு வீதமாகக் காணப்படுகின்றது. அதற்கு 20 வீதம் மொத்த சக்தி தேவைப்படுகின்றது.

            மூளையானது 90 தொடக்கம் 120 நிமிடங்களே ஒருவிடயத்தை முழுமையாகக் கிரகிக்கும். அதன்பின் 15 – 20 நிமிடங்கள் மூளைக்கு ஓய்வு தேவைப்படுகின்றது. அதனாலேயே பாடசாலைகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் 45 நிமிடம் அல்லது ஒரு மணித்தியாலங்கள் என ஒதுக்கியுள்ளார்கள். அதன்பின் பிள்ளைகள் கவனத்தைத் திசை திருப்பிவிடுவார்கள். ஆனால் நாம் மட்டும் பிள்ளைகளை 24 மணிநேரமும் படியுங்கள் படியுங்கள் என்று போட்டு வறுத்தெடுப்போம்
                                                              

         கரு உருவான மூன்றாவது வாரத்திலிருந்து மூளை வளரத் தொடங்கிவிடுகின்றது. ஆரம்பம் 3 மடிப்புக்களுடன் அமைகின்றது. 3 தொடக்கம் 6 ஆவது மாதம் வரை நன்கு வளர்ந்து பெருமூளை. சிறுமூளை, தண்டுவட்டம் என அதன் பாகங்கள் பிரிந்து விரிவடையும். 3 மாதக்கருவின் எடையில் அரைவாசி மூளையின் எடையாகக் காணப்படுகின்றது. தூங்கும்போது இயங்கும் போது 24 மணித்தியாலங்களும் வெளிச்செல்களை உள்வாங்கி வடிகட்டி தேவையானவற்றை மட்டும் பதிவுசெய்யும். ஓய்வு தேவை என நாம் தூங்கினாலும் மூளையானது ஓய்வில்லாமல் எமக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றது.
           
                       பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையை விடக் கொஞ்சம் சிறியது. மூளை சிறியது என்பதற்காகப் பெண்கள் அறிவு குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் மூளை சிறியதாக இருப்பதனால், மிகவிரைவில் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. ஆண்களின் மூளையை விட பெண்களுக்கு வலது இடது இருபக்க மூளையும் அதிகமாக செயல்படும் தன்மை பெற்றிருக்கின்றது. இதனால் இவர்களுடைய அறிவுத்திறன் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால், ஆண்கள் ஒரு நேரத்தில் ஒரு வேலையையே அதிகமாகச் செய்வார்கள். பெண்கள் அப்படி இல்லை. அதனால் அதிகமான பயிற்சி அவர்களுடைய மூளைக்கு ஏற்படுகின்றது. அத்துடன் பெண்களின் மூளை ஒலிகளை மிகவும் துள்ளியமாக கேட்கும் திறன் வாய்ந்தது என்பதைச்  சொல்வதில் பெருமைப்பட்டு ஆண்களுக்கு இப்பதிவில் ஒரு பொறாமைத் தன்மையை ஏற்படுத்திப் பார்க்கின்றேன். 
   
                       இந்த மூளையின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையாவன குரோமோஸோம், சில வைரஸ் கிருமிகள், ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்காத நிலை போன்றவையாகும். இதைவிட மூளைக்குச் செல்லுகின்ற இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைந்தாலும் மூளைத்திறன் குறைந்து காணப்படும். புரதம், இரும்பு, கொழுப்பு, மாச்சத்து, போலிக்அசிட், போன்றவை தேவையான அளவு கிடைக்க வேண்டும்.  போதைப்பொருள்களைப் பயன்படுத்தல், அளவுக்குமீறிய குடிப்பழக்கம், தலைக்குச் செல்லும் இரத்தஓட்டம் மந்தநிலையில் இருத்தல் போன்ற காரணங்களினால் மூளைக்கு நோய் ஏற்படுகின்றது.
              மூளையானது நாம் பார்க்கும், கேட்கும் அல்லது பார்த்த கேட்ட விடயங்களை குறைவான நேர பதிவுப்பட்டையில் பதிந்து வைக்கும் .இது ஒரு கரும்பலகை போன்றது. நிரம்பியவுடன் அழித்துவிட்டு வேறு பதிவுகளை அந்தப் பதிவுப்பட்டையில் பதியும். அதிகமாக நாங்கள் மீட்டிப் பார்க்கும் விடயங்களை நீண்ட காலப் பதிவுப்பட்டையில் பதிந்து வைத்திருக்கும். ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்பத் மீட்டும் போதுதான் அது நினைவில் இருக்கும் இல்லையெனில் மூளையென்னும் கரும்பலகையில் அழிந்துவிடும். இதுவே நாம் இளவயதில் கற்ற பல விடயங்கள் இப்போது நினைவில் இல்லாமைக்குக் காரணமாக அமைகின்றது. ஒரு நாளில் பலவகையான செய்திகள் வந்து சேரும். இச்செய்திகளுடன் தொழிற்படும் செயல் Corpus Callosum என்று அழைக்கப்படும். இரண்டு மூளைக்கும் இடையில் ஒரு பால்கன் (Palkan) என்னும் ஒரு பொருள் இருக்கும். இதுவே இரண்டு மூளையையும் ஒருங்கிணைக்கின்றது. இரண்டு மூளையும் சேர்ந்து தொழிற்படுவதனாலேயே எங்கள் மூளை திறனுடையதாகின்றது. முக்கியமானவை முக்கியமான இடத்தில் பதியப்பட்டிருக்கும். மற்றவை தூசிபிடித்துப் பொருள்கள் கிடப்பது போல் ஏதோ ஒரு இடத்தில் விழுந்துவிடும். அதனாலேயே எங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாதவற்றை எங்கள் மூளை பதிவதில்லை. 
                                         
                     
                                  மூளையில் இருக்கும் இரசாயணப் பொருள்கள் நரம்பின் மூலம் வருகின்ற செய்திகளைப் பெற்று அதற்குரிய தாக்கத்தை வெளிப்படுத்தும். ஒரு மனிதனுக்கு எதையும் செய்யவேண்டும் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுப்பது டொனமின் (Donamin ) என்னும் மூளையில் சுரக்கின்ற இரசாயணப் பொருளாகும். டொனமின் சுரப்பை குறைவாகப் பெற்றிருப்போர் எதையும் செய்வதற்கு ஆர்வம் அற்றவராக இருப்பார். படிப்பில் ஆர்வம் குறைந்த பிள்ளைகளுக்கும் இந்த டொனமின் குறைபாடே காரணமாகும். இதேபோல் சக்தியைக் கொடுப்பதற்கு குளுரமின் (Glutamin) எனப்படுகின்ற சுரப்புத் தேவைப்படுகின்றது. அட்ரேனாலின் ( Adrenalin) எனப்படுகின்ற ஒரு சுரப்பை எமது மூளை எமக்குத் தருவது எந்த சமயத்தில் என்றால், எமக்குப் பயம் ஏற்படுகின்ற போது திடீரென அபார சக்தி ஏற்பட்டு நாம் தொழிற்படுவோம் பயத்துக்குத் தேவைப்படும் பெற்றோல் என்பார்கள். ஒரு நாய் துரத்தி வருகின்ற போது திடீரென ஒருவர் சிறப்பாக ஓடுகின்றார் என்றால், அவருக்கு அட்ரலின் சிறப்பாக வேலை செய்கின்றது என்பது தெரிந்துவிடும். 
                   

                          செரரோனின் ( Serotonin) குறைவாக இருக்கும் ஒருவருக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். இதுவே மனிதர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றது நாம் உணவு அருந்துகின்றபோது இந்த அளவு உணவு எமக்குப் போதும் என எண்ணத் தோன்றும் எண்ணத்தைக் கொண்டுவருவது லெப்ரின் (Leptin) எனப்படும் சுரப்பே. இச்சுரப்பு போதுமான அளவில் இல்லாதவர்களே வயிறு என்ற பாத்திரத்தினுள் உணவைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். தம்மால் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும் மேலும் சாப்பிடவேண்டும் என்று என் உள்ளம் தூண்டிக் கொண்டே இருக்கும் என்று அவர்களே கூறுவார்கள். அவர்கள் உடலைப் பார்க்கும்போது கவலையாக இருக்கும். இது போன்று பல சுரப்புக்களைச் சுரந்து எம்மைத் தமது கட்டுப்பாட்டுக்குள் மூளை வைத்திருக்கின்றது. 

கவனம் எடுக்க வேண்டியவை

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம். இரண்டையும்  பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் மூளையில் ஞாபகசக்தியை அதிகரிக்கும். வல்லாரை இலை 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து 5 கிராம் தினசரி தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும். நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றைத் தவறாமல் சாப்பிட்டு வர மூளை நல்ல நிலையில் இருக்கும். 

ஞாபகசக்திக்கு உகந்தவை
   

வல்லாரை                                       
பாதாம்பருப்பு

வெண்டைக்காய்            
உருளைக்கிழங்கு

தக்காளி
மாதுளம்பழம்                

என சித்த வைத்தியம் கூறுகின்றது..

மூளை இல்லையென்றால், எமது உடல் இருந்து என்ன பயன்.. உயிர் இருந்து என்ன பயன். உடல் உறுப்புக்கள் பழுதுபட்டால் மூளையால் இயங்கும் உறுப்புக்களைப் பழுது பார்க்கும் அறிவை மூளை கொடுக்கும். ஆனால், மூளை பழுதடைந்தால் எமது கதி அதோகதிதான்.
இப்பதிவைப் பார்த்தவர்கள் நீங்கள் அறிந்த மூளை பற்றிய தகவல்களை பின்னூட்டத்தில் இட்டீர்களானால் மனமகிழ்வேன். மூளை பற்றி யான் எழுதிய ஒரு கவிதையையும் சுவைத்து இன்புறுங்கள்.

                                                  மூளை

நீ படைக்கப்படவில்லை அது உண்மை.
எனக்குள்ளே இருந்து வளர்ந்தாய் - என்
எண்ணமெல்லாம் செயலெல்லாம் நீயானாய்
என் ஆச்சரியமும் நீயே என் ஆண்டவனும் நீயே
என் பொய்யனும் நீயே எனை ஏமாற்றும் பேர்வழியும் நீயே
ஆண்டவரெல்லாம் அப்படித்தான் என்பதனாலோ
எனை ஆளும் நீயும் எனை ஏமாற்றுகிறாய்
கண்ணுக்கு மூடியிட்டு  நான் உறங்க
காணாதவையெல்லாம் கண்டதென்பாய்.
நடக்காதவையெல்லாம் நடந்ததாய்க் காட்டுவாய்
நிழல் படத்தைக் காட்டி
நிஜங்ளையெல்லாம் நடிக்க வைப்பாய்
கண்மூடிக் கழித்திருக்கும் இன்பத்தை
கண் திறக்க மறைக்கச் செய்வாய் - ஆனால்
கனவில் நான் வாழும் களிப்பான வேளைகளை
தானமாய்த் தந்து கணப்பொழுது சுகமாவது பெறவைக்கும்
தலைசிறந்த இயக்குனரே, தயாரிப்பாளரே
நலமாய் நீ வாழ ஊட்டச்சத்து தருகின்றேன்
வாழ்க நீ வளமுடன்.


Sunday, October 9, 2011

கற்றல் வனப்பு


           

  குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
 மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து
 நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
 கல்வி யழகே யழகு.

என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும். இக்கல்வி தமது பிள்ளைகளுக்கு வாய்க்கப் பெறுவதற்குப் பெற்றோர் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கற்பதற்கான வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடும் பெற்றோர்களும், பிள்ளைகளும் பயன்பட வேண்டுமென்ற குறிக்கோளுடன் இப்பதிவு உங்கள் முன் விரிகின்றது.

யாருக்கும் படிப்பு வரமாட்டாது என்ற நிலை இல்லை. எல்லோராலும் எல்லாம் முடியும்.  படித்தவிடயங்களை ஞாபகப்படுத்துவதற்கு நிச்சயமாக ஒவ்வொருவரும் படித்தல் வேண்டும். நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சுவைத்தது, நுகர்ந்தது எல்லாமே எங்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும். முக்கியமான விடயங்களைச் சிறிதுநேரம் கொஞ்சநாளைக்குத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும். பின் நீங்கள் நினைக்காமலே இவ்விடயங்கள் மனக்கண்முன் வந்து நிற்கும். உதாரணமாக தொடர்ச்சியாக நீங்கள் வேலைக்குச் செல்லும் வழியைச் சிந்தித்துப் பாருங்கள். முதல்நாள் முழுக்கவனம் எடுத்துச் சென்ற பாதை இப்போது எப்படி உங்கள் மனதில் பதியப்பட்டிருக்கின்றது என்பதை. இப்படித்தான் படிப்பும் தொடர்ச்சியாகச் செய்கின்ற போது ஆழமாகப் பதிகின்றது. ஒரு விடயத்தை 3 கிழமைக்குப் பயிற்சி செய்தல் மனப்பதிவுக்கு சிறந்த பயிற்சியாகும். இதற்கு மன ஒருமைப்பாடும் அவசியப்படுகின்றது. எந்தவித கடினமும் இல்லாமல் மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுவதை அவதானியுங்கள். இதனை நிமிடக்கணக்கில் செய்யுங்கள். இப்படிச் செய்கின்ற போது வேறு எண்ணங்கள் வந்து தடை செய்யாது. இதைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வாருங்கள். உங்கள் மூளை இலகுவாகும். 


படிக்கின்ற அறையினுள் பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், அவ்வெளிச்சம் படிக்கின்ற பிள்ளையின் எதிரே இருக்கக் கூடாது. கூடுதலான வெளிச்சத்தைக் கண்ணுக்குக் கொடுக்கும்போது எங்கள் கண்களினால் மிகவும் பாரத்தைத் தூக்கவிடுகின்றோம். மிக்க இருட்டுள்ள அறையாக இருக்கும் போது வித்தியாசமான ஓமோன்கள் சுரக்கப்பட்டு எமக்குக் களைப்பு ஏற்படுகின்றது. எனவே பொருத்தமில்லாத வெளிச்சம் களைப்பையும் பார்வை இடையூறுகளையும் சிந்தனைக் களைப்பையும் ஏற்படுத்தும். எனவே நேரடியான சூரியவெளிச்சத்தைத் தவிர்த்து சிறப்பான அளவான சூரியவெளிச்சத்தை அறையினுள் வரவிடுங்கள். இடது கைப்பழக்கமுள்ளவர்கள் வலதுபக்கம் இருந்து வெளிச்சம் வரச்செய்வதுடன் வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பக்கம் இருந்து வெளிச்சம் வரும்படியாகவும் ஒழுங்கு செய்யுங்கள். இப்படியாக ஒழுங்குபடுத்தும்போது நிழல் படிக்கின்ற புத்தகங்களில் படியாமல் தவிர்க்கலாம்.


நல்ல காற்றோட்டமுள்ள அறையைத் தெரிவுசெய்ய வேண்டும். அந்த அறையினுள் போதுமான ஒட்சிசன் கிடைக்கப் பெறாவிட்டால், மூளைக்குத் தேவையான ஒட்சிசனை இரத்தம் கொண்டு சென்று கொடுக்காது.

படிக்கின்றபோது நிமிர்ந்து இருக்க வேண்டும். அப்போது மூளைக்குச் சீரான ஒட்சிசன் ஓட்டம் கிடைத்து போதுமான சத்துக்களைப் பெறும்.

சாப்பாட்டு மேசையைப் படிக்கும் மேசையாகப் பயன்படுத்தாதீர்கள்.

படுத்துக் கொண்டு படிப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கின்றபோது உடலுக்கு களைப்பு ஏற்படும். இந்த நிலை படிப்பைத் தாக்கும். இது சமையலறை மேசைபோல் வேறு சிந்தனையைக் கொண்டு வரும். 

நெருக்கமான அறையாக இருத்தல் கூடாது. நெருக்கமான அறை மன ஒருமைப்பாட்டைக் (concentration) குறைக்கும். 

ஒரு போத்தல் தண்ணீரை படிக்கின்றபோது அருகில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் உங்கள் நல்ல நண்பன். நீங்கள் நல்ல உணர்வுகளை இழக்கின்ற போது குடிக்கின்ற தண்ணீரை நல்ல உணர்வுகளைத் தந்து மீண்டும் படிக்கின்ற சூழலுக்கு உங்களைக் கொண்டு வரும். 

சிலருக்கு இசை கேட்டுக் கொண்டு படிப்பது படிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதாகக் கூறுகின்றார்கள். இசையினால் இருபக்க மூளையும் வேலை செய்கின்றது என்பது விஞ்ஞானிகள் கருத்து. அமைதியான பின்புல இசை கணிதம் செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. தயவுசெய்து ஆக்கிரமிப்பான ஒலிகளைப் படிப்பின்போது பயன்படுத்த வேண்டாம். தியானம் செய்வதற்குப் பயன்படுத்தும் இசை நல்லதல்ல. இது எங்கள் மூளையிலுள்ள சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்த மாட்டாது. ர்ip ர்ழி இசை கற்கும் முயற்சியைத் தடுக்கும் அல்லது நிறுத்திவிடும். வானொலியைச் சிறப்பு என்று கூறமுடியாது. அதில் வரும் விளம்பரங்கள் மூளையை வேறுபக்கம் திசைதிருப்பிவிடும். 

நீங்கள் உங்கள் பிள்ளைக்கு இசையுடனா? அல்லது இசையில்லாமலா? கூடுதலான மனஒருமைப்பாடு இருக்கின்றது என்பதை முக்கியமாக அறியவேண்டும். அதன்படியே உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும். 

படுக்கைக்குப் போகும் முன் முக்கியமான பாடம் சம்பந்தமான விடயங்களை ஒலிநாடாவில் பதிந்து கட்டிலில் கேட்டுக் கொண்டு படுத்தல் நல்லது. எங்கள் மூளை அரைநித்திரையில் நன்றாகப் பதிவை எடுத்துக் கொள்ளும்.

மூளையானது 90 தொடக்கம் 120 நிமிடங்கள் ஒரு விடயத்தில் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அதன்பின் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்தல் சிறப்பு. இந்த நேரத்தில் நீர்குடித்தல், உடல் அசைவை ஏற்படுத்தல், இடையிடையே யன்னலைத் திறந்து ஒட்சிசனை அறையினுள் வருவதற்கு இடம் அளித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடலாம். 

படிக்கின்ற விடயங்களை எழுதிவைத்தல் சிறப்பு. சுருக்கமாக எழுதியவற்றை நாட்குறிப்பேட்டில் அல்லது அடிக்கடிப் பார்வையிடும் பக்கத்தில் எழுதி வைக்கலாம். 

எல்லாவற்றிற்கும் நல்ல மனநிலை தேவைப்படுகின்றது. நல்ல மனநிலை இருக்கும் போதுதான் எங்களுடைய மூளை அன்ரெனா சிறப்பாக வேலைசெய்யும். 
                                                         Get Gifs at CodemySpace.com

Saturday, July 30, 2011

முகத்துக்கான பயிற்சிகள்





அழகோ கல்வியோ எதுவானாலும் பயிற்சியின் மூலமே சரியான பலனைப் பெறமுடியும். முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்கவும் இரத்தஓட்டம் சிறப்பாக செல்லவும் இப்பயிற்சி முறைகள் பலனைத்தரும்.  

பயிற்சி 1:

உங்கள் வாயை நன்றாக விரித்துத் திறந்து தலையை மெதுவாக பின்புறமாகச் சரித்துக் கொள்ளுங்கள். இப்போது வாயை மூடித்திறந்து கொள்ளுங்கள். இவ்வாறு 10 தடவைகள் செய்யுங்கள். இப்பயிற்சி வாய்க்கும் தாடைக்கும் சிறந்த பயிற்சியாகும்.

பயிற்சி 2:


கண்ணாடிக்கு முன்னால் இருந்தபடி உங்கள் உதட்டை உள்ப்பக்கமாகத் திருப்புங்கள். வாயை இறுக்க மூடியபடி காற்றை உள்ளே அடைத்து வைத்திருங்கள். இப்போது உங்கள் கன்னம் நன்றாக உப்பியிருக்கும். இப்போது ஒவ்வொரு கன்னத்தையும் இரண்டு  விரல்களால் மாறிமாறி அமத்துங்கள். இப்போது இரு கன்னங்களுக்கும் பயிற்சி கிடைக்கும். இதனால் மென்மையான கன்னங்களைப் பெற்றுக்கொள்ளலாம். கவிஞர்களுக்கும் கருச் சேர்க்கலாம்.

பயிற்சி 3 :


உங்கள் மேற்பற்கள், கீழ்ப்பற்கள் இணர்டையும் இறுக்க அழுத்தி உதடை விரியுங்கள். 10 தடவைகள் எண்ணியபின் பழைய நிலைக்கு வாருங்கள். இப்படி 10 தவைகள் செய்யுங்கள். 
இப்பயிற்சிகளை நாள்தோறும் தொலைக்காட்சி பார்க்கும் போது சாதாரணமாகச் செய்து கொண்டிருங்கள். இதற்கென்று நேரம் பொழுது தேட வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாகப் பலனைக் கண்டுகொள்வீர்கள்.
நேரம் கிடைத்தால் இந்த வீடியோ கிளிப்பைப் பாருங்கள்.



Sunday, June 26, 2011

முகத்தில் ஏற்படும் சுருக்கம்

                                   

முகத்தில் ஏற்படும் சுருக்கம்

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் முதுமை என்பது முடிவு. அந்த முதுமையிலும் இளமையாக இருக்கப் பலரும் விரும்புவார்கள். எமது பழக்கவழக்கங்கள், நோய், கவலை போன்றவை இளமையிலேயே முதுமையைக் கொண்டுவந்துவிடுகின்றது. மனதால் நாம் இளமையுடன் இருக்கவேண்டும் என்ற கருதுபவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி, உணவுப்பழக்கவழக்கங்களில் முழுக்கவனம் எடுக்கவேண்டியது அவசியமாகின்றது. முதுமை வந்துவிட்டால் எமது தோலில் தளர்ச்சி ஏற்பட்டு சுருக்கங்கள் விழத் தொடங்கிவிடும். ஆயினும் முதுமை ஏற்படாமலே சுருக்கங்கள் எமது முகங்களில் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. நாங்கள் பேசுகின்றோம் இதைவிட எங்களுடைய முகமானது சிரிப்பு, அழுகை, கவலை, போன்ற பலவிதமான உணர்ச்சிப்பிரதிபலிப்புக்களை எடுத்துக் காட்டுகின்றது. அப்போது எண்ணற்ற தசைகள் இதற்கான தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
   
அதிகபதட்டம் கொள்ளுகின்ற போது எமது தசைகள் வலுவாக உழைக்கவேண்டி ஏற்படுகின்றது. இதுபோலவேதான் கோபப்படுகின்ற போதும் தசைகள் கூடுதலாகத் தொழிற்படுகின்றன. இதனாலேயே ''அதிகம் கோபப்பட்டாயானால், விரைவில் வயது போய்விடும்'' என்பார்கள். தோலின் ஓய்வுக்கு உடலின் இழுபடுகின்ற தசைஇழையங்கள் தேவைப்படுகின்றன. இது அமினோவமிலத்தினால் ஆக்கப்படுகின்றது. கடங்து வரும் காலங்களில் இந்த அமினோவமிலம் தோலுக்குக் குறைவாகக் கிடைக்கின்ற போது தோல் குறைவான நெகிழ்வடையும் தன்மையைப் பெறுகின்றது. இதனால், நாம் முதுமையiகின்றோம். உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன. இச்செயற்பாட்டை நம் கண்களால் காணமுடியாது. ஆனால், எமக்கு நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது. எமது கடந்தகாலப் புகைப்படங்களையும் தற்போதைய புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இதனை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

அளவுக்கு மீறி தசை இழுபடுவதற்குரிய காரணங்கள்:

புகைப்பிடித்தல், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம், அதிகூடிய அமினோவமிலம் கொண்டிருத்தல்

வாழ்நாளில் முகத்தசைகளுக்குத் தேவைப்படுகின்ற ஓய்வை வழங்கும் இழைகள் குறைந்த வலிமையுடன் காணப்படல்.

வாழைப்பழ மாஸ்க் தயாரித்தல்

ஒரு பழுத்த வாழைப்பழம்
ஒரு மேசைக்கரண்டி றோஸ்வாட்டர் ( Rose Water)
வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் றோஸ்வோட்டரைக் கலக்க வேண்டும்.  இந்த குழையலை( Mask) முகத்தில் நன்றாகப் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்தபின் நகச்சூடான தண்ணீரில் கழுவ வேண்டும். தினமும் இதனைப் பயன்படுத்தினால் முகச்சுருக்கத்தைக் குறைக்கலாம்.

இதைவிட தற்போது முகச்சுருக்கத்திற்கு எதிரான(Anti falten creme, Anti - wrinkle Cream) கடைகளில் விற்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.



Sunday, June 12, 2011

இரத்தச் சோகை



       இரும்பை விரும்பாவிடில் 
       இயல்பு நிலை தளர்ந்து விடும்
       இரும்பு தேவை உலகுக்கு
       இரும்பு தேவை உடலுக்கு
       இரும்பு விரும்ப 
       இரும்பு உள்வரைத் தேடவேண்டும்
       இருக்குமிடம் தெரிந்து கொண்டு
       இரும்பாரைத் துணை சேர்க்க வேண்டும்.



உடல் முழுவதும் ஒட்சிசன் சீரான முறையில் ஓடவில்லை என்றால், உடல் பல பிரச்சினைகளைச் சந்திக்கும். மூளைக்கு ஒட்சிசன் தேவையான அளவுக்குக் கிடைக்கவில்லையென்றால், மூளை தன் தொழிற்பாடடைச் சரியான முறையில் செய்யமுடியாமல் போய்விடும். ஹீமோகுளோபின் ஆனது இரத்தத்திலுள்ள ஒட்சிசனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியைத் தலைமேல் கொண்ட செய்கின்றது. இந்த ஹீமோகுளோபின் புரதம், இரும்புச்சத்து இரண்டினாலும் உருவானதே. இரத்தத்தில் சிவப்பணு குறைவதுடன் சிவப்பணுவிலே ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படும்போது இரத்தச்சோகை என்னும் நோய் ஏற்படுகின்றது. உடலிலே இரும்புச்சத்து குறையும் பட்சத்தில் சிவப்பணு குறைவதுடன் டீ12இ  குழடiஉ யஉனை போன்றவைக்குப் பற்றாக்குறை ஏற்படும். 
            ஆண்களுக்குச் சராசரியாக ஈமோகுளோபினானது 100 மி.லீட்டர் இரத்தத்தில் 12 – 18 கிராம் அளவில் இருக்கவேண்டியது அவசியமாகியது. பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவில் இருக்கு வேண்டியதும் அவசியமாகின்றது. 
            பெரும்பாலும் பெண்களே அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான இரத்த இழப்பு, சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைதல், சிவப்பணுக்களின் அழியும் தன்மை. இரத்தநாளங்களில் கண்ணுக்குத் தெரியாத இரத்துக்கசிவு, போன்றவை இந்நோய் ஏற்படுவதற்குக் காரணங்களாகின்றன. பெண்களுக்கு மாதவிடாயின் போதும், பிள்ளைப்பேற்றின் போதும் அதிகமான இரத்துப்போக்கு ஏற்படுவதனால், பெண்கள் இந்நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

            இந்நோயுள்ளவர்களைப் பார்த்தவுடன் கண்டுகொள்ள முடியாது. இரத்தப்பரிசோதனையின் போதே அறியக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுக்கு விபூதி, அரிசியைச் சாப்பிடத் தூண்டும் உணர்வு ஏற்படும். இந்நோயுள்ளவர்களின் அறிவுத்திறன் குறைந்து காணப்படும். ஒருநிலைப்பாடு இன்றியிருப்பதுடன், கவனக்குறைவு  காணப்படுவதனால் பரீட்சை எழுதுவதற்குக் கடினப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தமது கடமையைச் சரியான முறையில் செய்யமுடியாமல் இருப்பர். இவர்கள் எப்போதும் களைப்படைந்தவர்களாகக் காணப்படுவதுடன், இவர்களுக்கு மயக்கம், தலைச்சுற்று, தலைவலி, கால்முகம் வீங்குதல், கண், உதடு, நகம் வெளிர்தன்மையுடன் காணப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இவ் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக இரத்தப்பரிசோதனை செய்தல் அவசியமாகின்றது. வைத்தியர் இரத்தத்திலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்து மாத்திரைகளை வழங்குவார். இதைவிட இயற்கையாகவே எமக்குக் கிடைக்கக் கூடிய உணவுவகைகளை உட்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபடலாம். 

சோயா உணவுகளை அதிகமாக உண்பது அவசியமாகின்றது.

முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டையை உடைத்துவிட்டுக் கிளறி நெய்விட்டு 41 நாட்கள் சாப்பிட்டுவர இரத்தம் விருத்தியடையும்.

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டுவர வேண்டும். 

பீர்க்கங்காய் வேர்க் கசாயமும் இந்நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

நேந்திரவாழைப்பழம் இரும்புச்சத்தை உடலுக்குக் கொடுக்கின்றது.
பீர்க்கங்காய், முருங்கைக்காய், சுண்டங்காய், பாவற்காய், சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

பீட்றூட், Broccoli போன்ற மரக்கறிகளும் நாவல், திராட்சை, அப்பிள், நாவல், பேரீச்சை ஆகிய பழங்கள் இந்நோயுள்ளுவர்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டியது அவசியமாகின்றது. 

http://www.youtube.com/watch?v=_mziGqISSpY

Saturday, May 21, 2011

கால்விரல்கள், பாதங்களைப் பாதுகாத்தல்


                                


உச்சியில் இருந்த உள்ளங்கால்வரை அழகாய் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருத்தரும் நினைப்பார்கள். ஆனால் சிலர் முகத்துக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் கால்களுக்குக் கொடுப்பதில்லை. விதம்விதமான அலங்காரங்களை முகத்திற்குச் செய்து கால்களை சட்டை செய்யாமல் விட்டுவிடுவார்கள். குதிகால்கள் வெடித்து வறண்டு (பித்தவெடிப்பு) Hornhaut காணப்படும். கால்விரல்நகங்கள் ஒழுங்கில்லாமல் வெட்டப்பட்டு சோபை இழந்திருக்கும். 40 தாண்டிவிட்டால் இது எதையுமே கவனிக்காத எத்தனையோ பெற்றோர்கள் எம்மத்தியில் இருக்கின்றார்கள். அழகான புடவை கட்டியிருந்தாலும் கால்ப்பகுதிப் புடவை உயர்ந்துவிட்டால், கால்களைப் பார்க்கமுடியாது. கால்கள் இரண்டும் எமது இரண்டு வைத்தியர்கள் போலே அமைந்திருக்கின்றன. எம்மைத் தாங்கிநிற்பது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் காணப்படுகின்றன. இதைவிட ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற பெண்கள் உசாராகிவிட்டார்கள். திருமணத்திற்கு ஆண்களைத் தேடும்போது அவர்கள் கால், கை அழகாக இருக்கவேண்டும் என்று பெற்றோரிடம் பணித்துரைக்கின்றார்கள். நானறிந்த ஒரு பெண் ''எமது ஆண்களின் கைகால்கள் வரட்சியாகக் காணப்படுகின்றது. அதைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கின்றது'' என்று கூறியதைக் கேட்டிருக்கின்றேன். எனவே கால்களைப் பராமரித்தல் பெண்களுக்கும் மட்டுமல்ல, ஆண்களுக்கும் அவசியமாகப்படுகின்றது. 

முதலில் பாதங்களில் பூசியிருக்கும் நகப்பூச்சை Nail Polish Remover கொண்டு அகற்ற வேண்டும். அதன்பின் Sodabicarbonate (Natron) ஐக் கிள்ளி எடுத்து வெதுவெதுப்பான நீரினுள் இட்டு சில துளிகள் Hydrogen peroxide (Wasserstoffperoxid)
 ஐயும் சேர்க்க வேண்டும். இந்த நீரினுள் நிகப்பூச்சு அகற்றப்பட்ட பாதங்களை வைக்கவேண்டும். சிறிதுநிமிடங்களின் பின் நகங்களைத் தேய்த்துத் துப்பரவு செய்யவேண்டும். குதிகாலை தேய்க்கின்ற கல் அல்லது கடையில் விற்கும் தேய்ப்பதற்குப் பயன்படும் உபகரணத்தைப் பயன்படுத்தி உராய்ந்து தேய்ந்து இறந்த தோல்களை அகற்ற வேண்டும். உலர்ந்த துணியினால் கால்களைத் துடைத்தபின் விரல் நகங்களில் இருக்கின்ற இறந்த தோல்களை தள்ளி அகற்றவேண்டும். பின் நகங்களை அழகான வடிவத்தில் வெட்டி, நகங்களுக்குச் சத்தைக் கொடுக்கின்ற கிரீம் பூசலாம். 


பாதங்களுக்கான பயிற்சி:

1. நேராக நின்று இரண்டு பாதங்களின் குதிகால்களையும் ஒன்றாக இணைத்து பாதவிரல்களை 45பாகை உயரத்திற்குத் தூக்குதல் வேண்டும். முழங்கால்களை வளைக்கக் கூடாது. இந்நிலையில் இரண்டு கைகளையும் நேராக உயர்த்திப் பிடித்துப் பின் முன்புறமாக உங்கள் கைகளைக் கொண்டு வாருங்கள். பின் பழைய நிலைக்கு வருதல் வேண்டும். 5 தடவைகள் இப்படிச் செய்யலாம்.
2. உயரமான இடத்தில் இருந்து கொண்டு உங்கள் கால்களைத் தூக்குங்கள். இப்போது முழங்கால்கள் நேராக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு பாதங்களையும் மணிக்கூட்டுக் கம்பிகளின் சுற்றும் போக்கில் சுற்றவேண்டும் பின் அடுத்த பக்கம் சுற்றவேண்டும். 


3. கதிரையில் இருங்கள். இரண்டு பாதங்களும் நிலத்தில் சரிசமனாகப் படவேண்டும். இப்போது உள்நோக்கியும் வெளிநோக்கியும் பாதங்களைத் திருப்புங்கள். 10 தடவைகள் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

4. கால்களுக்கு மசாஜ் கொடுக்கவேண்டும். மசாஜ் செய்யும் போது மிகுதியாக அழுத்தக்கூடாது. ஏனெனில் அழுத்துகின்றபோது அழுத்துகின்ற இடங்களில் அடையாளம் தோன்றும். விரைவாகச் செய்யவும் கூடாது. கணுக்காலில் ஆரம்பித்து கெண்டைக்கால் முழங்கால் வரைத் தொடரலாம். விரல்கள் முழுவதும் மசாஜ் செய்யப்படவேண்டும். கைவிரல் நுனிகளில் எண்ணெய்யை எடுத்து தட்டுதல், கிள்ளுதல், உருவுதல், போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.



கால்களுக்குப் பொருத்தமான பாதணிகளை அணிதல் வேண்டும். இல்லையெனில், பாதங்களில் அடையாளம் தோன்றுவதுடன் கால்களில் காய் போன்று தோன்றும் Corns (Hüneraugen)  நோய் ஏற்படும். இப்போது மீன்கள் உள்ள நீரினுள் கால்களை வைத்து நோயுள்ள தோல்களை மீன்களை உண்ணப் பண்ணுகின்ற ஒருமுறையைக் கையாளுகின்றார்கள். 

இதன்படி நடந்து கொண்டு அழகான பாதமுள்ள ஆண்மகனாகவும் பெண்ணாகவும் வாழ வாழ்த்துகள்

Friday, April 15, 2011

கண்களை மேலும் அழகுபடுத்த சில குறிப்புக்கள்

           
இந்த உலகமானது அழகான, அற்புதமான, இரம்யமானது. இதை இரசித்து, இன்புறப் பிறந்தவன் மனிதன்.  காலைக்கதிரவன், மாலைமதியம், விடியலின் விந்தை, துள்ளிடும் கடல் அலை, துடித்திடும் மீன்கள், நீலமேகத்தின்  வெண்முகில் கூட்டம், வியப்பூட்டும் விருட்சங்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் மலர்க்கொத்துக்கள், வகைவகை வேலைப்பாடுகள் கொண்டு பறந்து செல்லும் வண்ணாத்திப்பூச்சிகள், இவ்வாறு அற்புதமான உலகத்தைக் கண்டுகழிக்கும் கண்களைப் பெற்ற மனிதன் பெரும்பேறடைந்த மனிதனாவான். காட்சியை மூளைக்குக் கொண்டு செல்லும் அற்புத கருவியாகிய கண்களைப் கவனமாகவும் கரிசனையுடனும் பாதுகாக்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு உண்டு.
                    கண்களும் கதைபேசும், கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு மயங்கிய காளையர்கள் ஓராயிரம், மான்விழி, கயல்விழி, இவ்வாறெல்லாம் போற்றிப் புகழப்படும் காந்தக் கண்கள் மற்றையோரைக் கவர்ந்து இழுக்க வேண்டுமானால், அம்மாபெரும் சக்திவாய்ந்த அவ் அற்புதக் கருவியைக் கண்காணிக்க ஆசை எல்லோருக்கும் ஏற்படல் விசித்திரமில்லையே.

கண்களுக்கு நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் ஓய்வு தேவை.

உணவிலே பச்சைக்காய்கறிகள், முட்டை, பாலாடைக்கட்டி (Chesse)    பால் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிழமைக்கு ஒன்று தொடக்கம் இரண்டு தடவை கண்களைக் கழுவுகின்ற தண்ணீரினால் (Eye Wash) கழுவுதல் வேண்டும். 

நீங்கள் எழுதுகின்ற போதும், வாசிக்கின்ற போதுமான வெளிச்சமுள்ள விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அதிகமான வெளிச்சமும் கண்களைப் பாதிக்கும்.  நீங்கள் அதிகூடிய சூரியவெளிச்சத்தில் வெளியில் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கறுப்புக்கண்ணாடி ( Sun Glass) பாவியுங்கள். இது உங்கள் கண்களைக் குளிர்வடையச் செய்யும். வீட்டிற்கு வந்தபின் கண்களை மூடி, குளிர்தண்ணீரில் துவைத்து எடுத்த பருத்திப் பஞ்சைக் கண்களின் மேல் வைத்தபடிப் படுத்திருக்க வேண்டும். 

வேலைப்பழு காரணமாக உங்கள் கண்கள் களைப்படைந்திருக்கும் வேளையில், உங்கள் முழங்கைகளை மேசையின் மேல் வைத்து இரண்டு உள்ளங்கைகளாலும் இரண்டு கண்களையும் மூடுங்கள்;. தலையின் பாரம் உள்ளங்கைகளில் இருக்க வேண்டும். 

சோர்வடைந்த கண்களுக்கு வெள்ளரிக்காய் சிறப்பானது. கட்டிலில் படுத்தபடி இரு கண்களின் மேலும் இமைகளை மூடி, இரண்டு கண்களின் மேலும் வெள்ளரிக்காயை வட்டமாகச் சிறிதாக வெட்டி வைத்திருந்து சில நிமிடங்களின் பின் எடுங்கள்.

கண்களின் கீழ் தோன்றும் கருவளையம், சுருக்கம் மறைவதற்கு பாதாம்பருப்பு எண்ணெய் (Almond Oil) பூசுவது நல்லது. இதேபோல், தேயிலையை கொதிநீரில் அவித்து, அந்நீரை வடித்தெடுத்து, இந்நீரினுள் பருத்திப் பஞ்சை தோய்த்து கண்களைச் சுற்றி ஒற்றி எடுங்கள். இதை ஒவ்வொருநாளும் செய்தல் நல்லது.

கண்களுக்கான பயிற்சிகள்:

இரண்டு கண்களையும் இறுக்க மூடவும். பின் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு விரிவாகத் திறக்கவும். இப்பயிற்சியைப் பத்துத் தடவைகள் செய்யவும்.

கண்மணிகளை 20 தடவைகள் வலது பக்கமாகவும், இடதுபக்கமாகவும் சுழட்டவும். இப்படிச் செய்கின்றபோது கண்இமை மூடியிருக்க வேண்டும்.

கண்ணாடிக்கு முன் நின்று உங்கள் கண்களைக் கண்ணாடியில் 5 நிமிடங்கள் பார்க்கவும்





Friday, March 4, 2011

அழகுக்கு அழகு சேர்க்க இடையழகு


மின்னல் இடை கொடியிடை என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற இடையை நினைத்துப் பார்க்கும் போது கற்பனையில் மிதக்கின்றீர்களா?. உலகஅழகிகள் எல்லோரும் எப்படித் தம்முடைய இடையை வளைந்த குடத்தின் வாயடி போல் வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணிப்பார்க்கின்றீர்களா? அது ஒன்றும் பரம இரகசியம் இல்லை. முயற்சி....முயற்சி...... தம்மை அலங்கரிக்கவும் தம்மை அழகுபடுத்தவும் அவரவர் முயற்சிக்காமல் வந்துவிடுமா? அளவுக்கு அதிகமான காபோவைதரேற்றையும்> நாவுக்குச் சுவைகூட்ட நல்ல இனிப்பான ஐஸ்கிரீமையும்> மூக்குமுட்ட உணவுகளையும் அடைந்துவிட்டு> அசையாமல் தொலைக்காட்சி சீரியல்களை பார்த்தபடி காலத்தைக் கழிப்பவர்கள்> அழகான இடையை எதிர்பார்க்க முடியுமா! 
      இதைவிட கற்பகாலத்திலும்> பிள்ளைப்பேற்றின் பின்னும் பலருக்கு இடையில் மனவருத்தம் தரும்படி மாற்றம் ஏற்படுகி;றது. இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டுமானால்.......
இக்காலத்தில் ஒவ்வொருநாளும் ஒலிவ் எண்ணெயினால் இடையில் மசாஜ் செய்யவேண்டும். இதனால் இடுப்புப்பகுதியில் சுருக்கம் தொளதொளப்பான சதைகள் மடிப்புகள் வராமல் தடுக்கலாம்.

கட்டிலில் படுக்கின்றபோது உயரமான தலையணைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
உறுதியான இறுக்கமான கெட்டியான படுக்கையைப் பயன்படுத்துங்கள்.





அழகான இடைக்கு இலகுவான பயிற்சி முறைகள்:


1. நேராக நிற்கவும். நிற்கும்போது பாதங்கள் இரண்டையும் சேர்த்து வையுங்கள். நேராக முதுகை வளைத்து உங்கள் கால்களின், பெருவிரல்களைத் தொடுங்கள். இப்போது கால்கள் முளங்காலில் நேராக இருக்கவேண்டும். இப்பயிற்சியை 10 தொடக்கம் 15 தரங்கள் செய்யுங்கள்.


2. தரையில் நேராகப்படுத்து கால்கள் இரண்டையும் சைக்கிள் ஓடுவதுபோல் அசைக்கவேண்டும்.


3. கால்களை முன்புறமாக நீட்டி நிலத்தில் இருங்கள். இரண்டு கைகளாலும் உங்களுடைய இரண்டு பெருவிரல்களையும் தொடுங்கள். இச்சமயத்தில் முழங்கால்கள் வளையக்கூடாது. 10 தொடக்கம் 15 தடவைகள் இப்பயிற்சியைச் செய்யுங்கள்.


4. நேராக நின்று மெதுவாக வலதுபக்கமாக வளைந்து நிலத்தைத் தொடுவதற்கு முயற்சியுங்கள். பின் மெதுவாக முதல் நிலைக்குத் திரும்புங்கள். அதன்பின் மெதுவாக இடதுபக்கம் வளைந்து இடப்பக்க நிலத்தைத் தொடுவதற்கு முயற்சியுங்கள். பின் பழைய நிலைக்கு வாருங்கள். இப்பயிற்சியை 5 தடவைகள் செய்யுங்கள்.


பயிற்சிகள் செய்யும்போது விரைவாகச் செய்யக்கூடாது. மெதுவாகச் செய்யலாம். பயிற்சி செய்கின்ற அறையினுள் காற்றோட்டம் இருக்கவேண்டும். ஒவ்வொருநாளும் ஒரு அரைமணித்தியாலங்களாவது உங்கள் உடற்பயிற்சிக்காக ஒதுக்கினீர்களானால், நீங்களும் ஒரு அழகான இடையுள்ள பெண்ணாக, அம்மாவாகக் காட்சியளிக்கலாம்.




Thursday, February 17, 2011

துளசிச்செடி


         
                         வீட்டுமுற்றத்திலே அழகான மாடம் அமைத்து, அதனுள் துளசிச்செடியைக் குடியிருக்க வைத்து நாளும் அதன் அழகையும் மருத்துவக்குணத்தையும் அநுபவிக்கும் மக்கள் தமிழகத்தில் அநேகர். மூலிகைகளில் அரசி என்று போற்றப்படும் துளசி இடியைத் தாங்கும் சக்தி படைத்தது. அதனால்த் தான் முற்றத்தை இச்செடி அலங்கரிக்கின்றது. இதனைவிட இச்செடி ஓசோன் வாயுவை வெளியிடுவதாகவும் விஞ்ஞானம் பகர்கின்றது. முற்றத்திலே அதன் இலைகளைப் பறித்துப் பச்சையாகவே உண்டு உடல்நோய் தீர்ப்போர் அதன் மருத்துவக் குணத்திற்குச் சாட்சியாக அமைகின்றார்கள். அப்பாடா இந்தத் துளசிக்குள் இத்தனை மருத்துவக் குணங்களா! என்று நாம் ஆச்சரியப்படும் வண்ணம், இது மருத்தவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதனை தெய்வீக மூலிகை என்றும் அழைக்கின்றார்கள். ஏனென்றால், இந்துமதத்தவர்கள் இலட்சுமி தேவியின் அம்சமாகக் கருதி இதனை வழிபடுகின்றார்கள். இதன் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றது. இதற்கு கிருஷ்ணதுளசி, இராமதுளசி, அரி, மாலலங்கர், துளவு, திருத்துளாய், குல்லை, வனம், விருத்தம், துழாய் எனப் பல பெயர்கள் உண்டு. இதில் பலவகைகள் உண்டு. அவை, கருந்துளசி, நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, முள்துளசி, கல்துளசி போன்றவையாகும். இதன் இலை, தண்டு, பூ, வேர் போன்ற அனைத்துப் பாகங்களும் மருத்துவக்குணத்தைக் கொண்டிருக்கின்றன. .   
                    துளசிச் செடி உருவான ஒரு ஆன்மீகக் கதையும் அறியப்படுகின்றது. துளசி என்பவள் விநாயகரை மானசீகமாகக் காதலித்த ஒரு தேவலோகக் கன்னியே ஆவார். தன் மனதுள் கலந்திருக்கும் காதலை, விநாயகரிடம் வெளிப்படையாக எடுத்துரைத்தார். தன் தாயைப் போன்ற பெண்ணையே நினைத்துநினைத்துக் காலம் முழுவதும் பிரம்மச்சரியம் காத்த விநாயகக் கடவுள் துளசியின் வேண்டுகோளை புறக்கணித்தார். '' திருமாலுக்கே சொந்தமான உன்னை யான் ஏற்றுக்கொள்ள முடியாது'' எனப் புறந்தள்ளினார். ஆனாலும், அதனை செவிசாய்க்காத துளசியை, விநாயகரும் ''செடியாகக் கடவது'' எனச் சாபமிட்டார். அதுமாத்திரமன்றி தன்னுடைய பூஜைக்கும் துளசியைத் தவிர்க்க வேண்டும் என ஒதுக்கிவைத்ததாகவும் ஐதீகம் பகர்கின்றது. இதன் விஞ்ஞானம் பற்றி மேலும் ஆராயவேண்டியுள்ளது.

                 இதன் மருத்துவக்குணங்களையும் எவ்வாறான நோய்களுக்கு இது மருந்தாக அமைகின்றது என்பதையும் கீழே பார்ப்போம்.

                இது உடற்பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன், உடற்சூட்டைத் தணிக்கின்றது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் இதயம், இரத்தநாளங்கள், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றைப் பலப்படுத்துகின்றது. மனஅழுத்தம், நரம்புக்கோளாறு, ஞாபகசக்தியின்மை போன்றவற்றிற்கு உடனடிப் பலன்தரும் மருந்தாக அமைகின்றது. 

பன்றிக்காய்சலுக்கும் மருந்தாக அமைகின்றது. துளசியும் சுக்கும்(வேர்க்கொம்பு) ஒன்றாக சேர்த்துக் கொடுக்கும் போது பன்றிக் காய்ச்சல் குணமடைவதாக சித்தமருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு(வேர்க்கொம்பு) 2 இலவங்கம்(கறுவா) சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமடையும்.

மனஅழுத்தம்:

துளசி இலையை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு வில்வஇலைச்சாற்றைக் கலந்து சிறிதளவு சூடாக்கி அருந்தினால், மனஅழுத்தம் தீரும்.

மாலைக்கண்:

கருந்தளசி இலையை நன்றாகக் கழுவி கசக்கிச் சாறு எடுத்து இரண்டு கண்களுக்குள்ளும் இரண்டு துளிவீதம் காலையும் மாலையும் தவறாது 9 நாள்கள் விட்டுவர மாலைக்கண்நோய் குணமாகும்.

நெஞ்சுச்சளி:

கற்பூரவல்லிச்சாற்றுடன் துளசி இலைச்சாற்றையும் ஒன்றாகக் கலந்து சிறிதளசு சூடாக்கிக் காலை வெறும் வயிற்றில் குழந்தைகளுக்குக் கொடுத்தவர நெஞ்சுச்சளி குணமாகும்.

குளிர்காய்ச்சல்:

நீலத்துளசிச்சாற்றை இரண்டு தேக்கரண்டி எடுத்து சூடுநீரில் கலந்து 3 மணிநேரத்திற்கு ஒருமுறை குடிக்கக் கொடுத்தால் குளிரின் நிமித்தம் வரும் காய்ச்சல் ஓடிவிடும். காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி தென்பட்டாலும் துளசியுடன் கொஞ்சம் வேர்க்கொம்பைத் தட்டிப்போட்டு கசாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் வருவது தவிர்க்கப்படும்.

மாதவிடாய் இரத்தப்போக்கு:

மாதவிடாயின் போது சில பெண்களுக்கு இரத்தம் கூடுதலாக வெளியேறும். இவர்களுக்கு வெற்றிலை, துளசியிலை, வில்வஇலை, மூன்றின் சாற்றையும் சரிசமமாக எடுத்து விளக்கெண்ணெய்(வேப்பெண்ணெய்); சேர்த்து நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து காலையில் ஒவ்வொரு தேக்கரண்டி 48 நாள்கள் குடித்துவர இரத்தப்போக்குக் குறைவடையும். 

மந்தக்குணம்:

துளசி இலைகளை செம்புப் பாத்திரத்தில் இரவு ஊறவைத்துக் காலையில் அந்தத் தண்ணீரைப் பருகிவர மந்தக்குணம் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும். 

பல்நோய்:

துளசி, புதினா இலைகளை நிழலிலே காயவைத்து பவுடராக்கி இதனைக் கராம்புப் பொடியுடன் கலந்து பல்துலக்கிவர பல்நோய் குணமாகும்.

வாய்நாற்றம், வயிற்றுப்புண்:

துளசி இலையைக் கழுவி நாளும் நன்றாக மென்று உண்டுவர அதன் சாறு உள் இறங்கி வயிற்றுப்புண், அதனால் ஏற்படும் வாய்நாற்றம் போன்றவை அகலும்.

தேள் கொட்டினால்:

துளசி இலையைப் பறித்துக் தேள் கொட்டிய வாயில் வைத்துத் தேய்த்தால் விஷம் இறங்கிவிடும். வலியும் நீங்கும். 

இதயநோய்:

நல்ல துளசி இலைகளை எடுத்து கழுவிச் சுத்தம் செய்தபின் மென்ற உண்டு வரவேண்டும். இது இதயநோய்க்குச் சிறந்த மருந்தாக அமைகின்றது. இந்தத் துளசி விதைகளை எடுத்து, இதயம் உள்ள இடப்புறத்தில் தைக்கப்பட்டிருக்கும் சட்டைப்பையினுள் வைத்துக் கொண்டால் இதயவலி நீங்கும் என்று கூறப்படுகின்றது.

இத்தனை மருத்துவக்குணங்களும் பொருந்திய துளசிக்கு முற்றத்தில் மாடம் அமைத்து வணங்கிவருதல் எத்தனை சிறப்பும் நன்றி செலுத்தும் பண்பும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
மனிதர்களையும் உருவாக்கி அவர்களின் நோய்களுக்கரிய மருந்துகளையும் தன்னுடனே கொண்டிருக்கும் இயற்கையை இருகரம் கூப்பி வணக்குவோம்;.