Pages

Sunday, April 8, 2012

பற்சொத்தையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க







Friends18.com Orkut Scraps

பற்சொத்தையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க

பற்களைப் பராமரிப்பது என்பது குழந்தைகளுக்கு பற்கள் நன்றாக வளர்ந்ததன் பின் எனக் கருதக்கூடாது. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது தாயாரின் கடமையாகின்றது. கர்ப்பகாலத்திலும் குழந்தைகளின் பால் பற்கள் ஆரம்பிக்கும்போது அதிக கவனம் எடுக்க வேண்டும். அப்போதுதான் இரண்டாவது பற்கள் சீரான முறையில் வளரக்கூடியதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் கல்சியம் நிறைந்த உணவுகளைத் தாய் உண்பதன் மூலமும் பிள்ளைக்குக் கல்சியம் நிறைந்த பால் போன்ற உணவுகளை வழங்குவதன் மூலமும் பற்சொத்தையிலிருந்து பற்களைப் பாதுகாக்கலாம்.

முதலில் குழந்தைக்கு முதல் பல் உருவாகும் போது பாக்டீரியாக்கள் வாயினுள் குடியேற இடம் அளிக்கக்கூடாது. பொதுவாகத் தாய்மார் குழந்தைகளினுடைய சூப்பியை, கரண்டியைத் தம்முடைய வாயினுள் வைத்து நாக்கினால் வழித்துத் துடைத்துப் பிள்ளைக்குப் பாவிப்பார்கள். உணவை முதலில் தாம் உருசி பார்ப்பதற்காகவும் கீழே விழுந்துவிட்டால் அக்கரண்டியை தமது நாக்கினால் நக்கித் துடைத்துக் குழந்தைக்குப் பாவிப்பார்கள். இதனால் பற்களில் பாக்டீரியா குடியேற வழி இருக்கின்றது. எனவே இதைத் தவிர்த்துவிடவும். பற்களை பருத்தித் துணியினால் துடைக்க வேண்டும் அல்லது மெதுமையான குழந்தைகளுக்கான தூரிகையினால் இரண்டுமுறை துப்பரவு செய்யவேண்டும். ப்ளோரைட் கலக்காத பற்பசையை முதலில் பாவிக்க வேண்டும். முதல் ஆண்டு ப்ளோரைட் மாத்திரைகள் எடுத்தபின் ப்ளோரின் கொண்ட பற்பசையைப் பாவிக்கலாம் என பல் வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றார்கள். குறைவான இனிப்புக்களை உண்ணக் கொடுத்தல், குறைவான இனிப்புப் பானங்களை அருந்தக் கொடுத்தல் அவசியமாகின்றது. 

பொருத்தமான பற்தூரிகைகள்

பிள்ளைகளின் கைகளுக்கு அளவான தூரிகைகளை பல் துலக்க கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான விரும்பியதை அவர்களே தெரிவுசெய்ய இடம் அளிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் பல் துலக்குவதில் நாட்டம் கொள்வார்கள். அவர்கள் கைகளுக்கு உகந்த தடிப்பான பிடியுள்ள பற்களின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையக் கூடிய தூரிகையுள்ளதாக இருக்க வேண்டும். முறையாக 6 தொடக்கம் 8 கிழமைகள் தூரிகையை மாற்ற வேண்டும். 6 வருடங்களுக்கு குழந்தைகளுக்கான பிரத்தியேகமான பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டும். இதில் ப்ளோரைட் அளவுகள் சரியான அளவில் அமைந்திருக்கும். 6 வயதிற்குப் பின் வேறு எதுவாகிலும் பயன்படுத்தலாம். ஆனால் அளவில் கவனம் எடுத்தல் வேண்டும். 

பாடசாலைப் பருவத்தினரின் பற் பாதுகாப்பு
பிள்ளைகள் தாமாகவே பற்களைத் துலக்குவதற்கு பெற்றோர் பயிர்ச்சியளிக்க வேண்டும். பெற்றோர் இணைந்து இரவில் பல் துலக்கலாம். ஒருநாளுக்கு 3 தடவைகள் பல் துலக்குவதுடன் இடையிடையே பல்பராமரிக்கும் Chewingum சப்பக் கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் இரவில் பற்களை பார்த்து சரியான முறையில் துலக்கப்பட்டுள்ளதா என அவதானிக்க வேண்டியது பெற்றோர் கடமையாகின்றது. இரவில் சாப்பாட்டின் பின் பல் துலக்கிவிட்டால், உணவு உண்பதற்கோ இனிப்புப் பானங்கள் அருந்துவதற்கோ இடம் அளிக்கக் கூடாது. 

பற்பாதுகாப்பு

இனிப்பு, அமிலப் பொருள்கள் பற்களைப் பாதிக்கின்றன. பழங்கள், தேசிப்பளி போன்ற அமிலத் தன்மையுள்ள பானங்களை அருந்தினால் அல்லது இனிப்புப் பொருள்களை உட்கொண்டால் உடனே வாயைக் கொப்பளித்துவிட்டு 20 நிமிடங்களின்பின் பல் துலக்க வேண்டும். 

இந்த வீடியோவை உங்கள் பிள்ளைகளுக்கு காண்பித்து பல் துலக்கும் விதத்தை அறிமுகப்படுத்துங்கள்.